பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
கணவருடன் சென்றபோது மோட்டார்சைக்கிளை கீேழ தள்ளி பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமங்கலம்,
கணவருடன் சென்றபோது மோட்டார்சைக்கிளை கீேழ தள்ளி பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழே தள்ளினர்
திருமங்கலம் கற்பக நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி காமாட்சி (வயது 34). இவர்களுடைய மகள் தாரணி (10), மகன் பார்த்தசாரதி (13). முருகன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார்சைக்கிளில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவர்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் நாராயணசாமி நகர் மதுரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அந்த வாலிபர்கள் திடீரென முருகன் வந்த மோட்டார்சைக்கிளை கீழே தள்ளினர்.
தாய்-மகள் காயம்
இதில் நிலைதடுமாறி முருகன், காமாட்சி மற்றும் குழந்தைகள் கீழே விழுந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் காமாட்சி அணிந்திருந்த இரண்டு பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்ததில் காமாட்சி மற்றும் தாரணி இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முருகன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.