மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு - பெண் உள்பட 2 பேர் கைது

புத்திரகவுண்டம் பாளையத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் நடவடிக்கை

Update: 2023-06-13 19:41 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

புத்திரகவுண்டம்பாளையத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

புத்திரகவுண்டன்பாளையத்தில் மளிகை கடையில் இருந்த விஜயா என்ற மூதாட்டியை தாக்கி அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சிவாஜிகுமார், துரைமுருகன், தங்கராஜ், ராஜேஸ்குமார் ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணும், பெண்ணும் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மூதாட்டியிடம் விசாரணை நடத்திய போது நகை பறிப்பில் ஈடுபட்டது ஆணும், பெண்ணும் என்பது தெரிய வந்தது.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், நகை பறிப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திருமலைபட்டுவை சேர்ந்த சுபாஷ், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த மோனிஷா என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் பகுதியில் அவர்கள் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்