விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
களக்காடு அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டுப்போனது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 49). விவசாயி. இவரும், இவரது மனைவியும் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை பூட்டி விட்டு, அங்குள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 5 பவுன், 2 பவுன் எடை கொண்ட 2 தங்கச்சங்கிலிகள், 5 கிராம், 3 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சாமுவேல் வீட்டில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.