போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைப்பு

சிறுகனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்தனர்.

Update: 2022-06-27 19:45 GMT

சமயபுரம், ஜூன்.28-

சிறுகனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்தனர்.

வழிப்பறி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்துள்ளது அக்கரைப்பட்டி. இங்குள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அடிக்கடி சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சிலர் நின்று இருந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், பிடிபட்டவர் திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் அங்கு வரவில்லை என்று தெரிகிறது.

இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைப்பு

இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரை பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு இரவு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் போலீஸ் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை கல்லால் எறிந்தும், கம்பால் அடித்தும் உடைத்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சிறுகனூர் போலீஸ் நிலையம் வந்து விசாரணை நடத்தினார்.

12 பேர் கைது

இந்த நிைலயில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக தெற்கு தழுதாழபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (22), தினேஷ்ராம் (27), விக்னேஷ் ராம் (21), தினேஷ் (26), திருப்பதி (27), நந்தகுமார் (27), தேவிமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்த மகேஸ்வரன் (41) உள்பட 12 பேரை சிறுகனூர் போலீசார் கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் பிடித்து கொடுத்த நபரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரகம்பி என்ற கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் 130 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் எதுமலை, வலையூர், ஸ்ரீதேவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பொதுமக்கள் பிடித்து கொடுத்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் பொதுமக்களில் சிலர் போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்துள்ளனர். எனவே இனிமேலாவது திருட்டு ஆசாமிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்