கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

Update: 2023-06-05 18:45 GMT


கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நேற்று முதல் தொடங்கியது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் இந்திலி குறுவட்டத்திற்கு உட்பட்ட இந்திலி, பொற்படாக்குறிச்சி, தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், லட்சியம், காட்டனந்தல், தென்தொரசலூர், வாணவரெட்டி, மேலூர், எரவார், கீழ்பூண்டி, வினைத்தீர்த்தாபுரம், உலகங்காத்தான், பங்காரம், நமச்சிவாயபுரம் உள்ளிட்ட 16 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா, உட்பிரிவு பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 158 பேர் கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஒவ்வொரு மனுக்கள் மீதும் உடனடியாக விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஜமாபந்தி வருகிற 12-ந்தேதி வரைக்கும் நடக்கிறது. இதில், இன்று இந்திலி , தியாகதுருகம் குறுவட்டத்தை சேர்ந்த மக்கள் மனுக்களை அளிக்கலாம். அதேபோன்று நாளை(புதன்கிழமை) தியாகதுருகம் குறுவட்டம், 8 மற்றும் 9-ந்தேதி நாகலூர், 12-ந்தேதி கள்ளக்குறிச்சி குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நடக்கிறது. அந்தந்த நாட்களில் அந்தந்த குறுவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்.

நிகழ்ச்சியில் தாசில்தார் சத்தியநாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் பரந்தாமன், மண்டல துணை தாசில்தார் சிலம்பரசன், குடிமை பொருள் தனி தாசில்தார் பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு தனிதாசில்தார் கோபாலகிருஷ்ணன், நிலஅளவை வட்ட சார் ஆய்வாளர் நந்தகோபாலன், வட்ட துணை ஆய்வாளர் செந்தில் முருகன், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்