திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவையினர் அளித்த மனுவில், 'அலகுமலை ஜல்லிக்கட்டு வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது. கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், குமராபாளையம் ஆகிய பகுதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. அலகுமலை பகுதியில் ஆண்டுதோறும் காளை வளர்ப்போரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. காங்கயம் காளைகளின் இனப்பெருக்கமும் அதிகமாகி உள்ளது. அலகுமலையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்குமுன் ஏற்பாடு செய்து கால்கோல் விழா நடைபெற்றது. இந்தநிலையில் நிர்வாகத்தின் அனுமதிக்காக அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே நாட்டுமாடு வளர்ப்போரின் நலன் கருதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு விழாவை பாதுகாப்புடன் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் களத்தை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டனர்.