கீழக்கரையில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு - 3,669 மாடுபிடி வீரர்கள்- 9,312 காளைகள் பதிவு
கீழக்கரையில் ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா நாளை மறுநாள்(24-ந் தேதி) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற இருக்கிறது.
அன்றைய தினம் நடைபெற இருக்கும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம், 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் தகுதியான நபர்கள் மற்றும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒரு புறம் இருக்க, 24-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள், திறப்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.