அடிப்படை வசதிகள் இல்லாத ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை அரசு சுற்றுலா தலமாக அறிவித்தும் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
திருப்பத்தூர்
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை அரசு சுற்றுலா தலமாக அறிவித்தும் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியில் முன்னேறிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உள்ளது. மனிதர்களின் அயராத உழைப்பினால் இந்த மாவட்டத்தின் தோல் தொழில் வளர்ச்சி, நாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டி தருவதாக உள்ளது.
ஜவ்வாது மலையை ஒரு பகுதியாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை மறுபகுதியாகவும் எல்லையாக கொண்டு அமைந்த இந்த மாவட்டத்தில் ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகியவை இயற்கை அளித்த அருட்கொடையாக விளங்குகிறது.
இவற்றை தவிர இந்த மாவட்டத்திற்கு ஆண்டியப்பனூர் அணை, காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆம்பூர் பகுதியில் உள்ள நாயக்கனேரி மலை, ஊட்டல் தேவஸ்தானம் போன்றவையும் பெருமை சேர்க்கின்றன.
தீராத நோயும் தீரும்
ஏலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக மழைநீர் அப்பகுதியில் இயற்கை மூலிகையுடன் கலந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அருவியாய் கொட்டுறது. இந்த அருவியில் குளித்து விட்டு சென்றாலே தீராத நோயும் தீர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 3 ஆண்டு காலமாக தொடர் மழையினால் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இடைவிடாமல் தண்ணீர் கொட்டி வருகிறது.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் விவசாயம் நிறைந்த, ஏலகிரிமலையால் சூழப்பட்ட பசுமை நிறைந்த பகுதியாக உள்ளது. அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து கொண்டே செல்லாம். இந்த நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மேலும் இங்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள லிங்க வடிவிலான வெற்றிவேல் முருகன் கோவிலை, நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து பார்த்தால் இறைவனே ஆசி வழங்குவதுபோன்ற இறை உணர்வு ஏற்படுகிறது. அதையொட்டி பெருமாள் கோவிலும் உள்ளது.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.
அடிப்படை வசதி இல்லை
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க செல்பவர்களக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அவ்வாறு கட்டணம் செலுத்தி ஆனந்தமாக நீராடினாலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாதது அவர்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிக்க பாதுகாப்புடன் கூடிய படிக்கட்டுகள் இல்லை.
அவ்வாறு செல்லும் ஆண்களும், பெண்களும் அருகருகே நின்று குளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இருக்கும் உடை மாற்றும் அறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் உடை மாற்றுவதற்கு பெண்கள் சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை.
எனவே சுற்றுலா தலமாக அரசு அறிவித்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கான இட வசதியும், நீர்வீழ்ச்சிக்கு பகுதிக்கு செல்ல படிக்கட்டு வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனியாக உடை மாற்றும் அறை, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பஸ் வசதி இல்லை
மேலும் இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. திருப்பத்தூரில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமே இங்கு எப்போதும் செல்ல முடிகிறது. எனவே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அனைத்து ஏழை, எளிய மக்களும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை காண்பதற்கு ஏதுவாக திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
இது குறித்து பொதுமக்கள், வியாபாரிகளிடம் கேட்டபோது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக அரசு அறிவித்தும், அந்த பகுதிகள் வனத்துறையின் கட்டுபாட்டில் அமைந்துள்ளதால் எந்தவித அடிப்படை வசதிகளையும், திட்டப்பணிகளையும் செய்ய முட்டுகட்டை உள்ளது என்றனர். எனவே அந்த தடைகளை களைந்து நீர்வீழ்ச்சியில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தை அகில இந்திய அளவில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.