மேல்சித்தாமூர்ஜெயினர் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேல்சித்தாமூர் ஜெயினர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்சித்தாமூர் ஜெயினர்களின் தலைமை இடமாகும். இங்கு பகவான் ஸ்ரீ 1008 பார்சுவநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சாமி வீதிஉலா நிகழ்ச்சி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, இரவு என்று இருவேளையும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.
இதில் முக்கிய விழாவாக தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் மேல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக சாமிகள் தலைமையிலும் இளைய மடாதிபதி முன்னிலையிலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ 1008 பார்சுவநாதர் சாமி வைக்கப்பட்டு, மாட வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஜெயினர் சமூகத்தினர், பொதுமக்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. 9-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.