பிச்சை எடுக்கும்போது தகராறு:மூதாட்டியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
பிச்சை எடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்
பிச்சை எடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மூதாட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அரசமரத்துகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 65). இவர், டவுன் பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் அவர் மதிய நேரத்தில் சிலர் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் இரவில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி காலை நாவலர் தெருவில் பெரியார் சிலை அருகில் சிலர் கொடுத்த இலவச சாப்பாட்டை வாங்குவதற்காக வள்ளியம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்ற சத்தியமூர்த்தி (38) என்பவருக்கும், மூதாட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் மூதாட்டியை தகாத வார்த்தையால் பேசியதோடு அவரை அடித்து தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
சிறை தண்டனை
இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மூதாட்டியை தாக்கிய சத்தியமூர்த்திக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதிவாணன் தீர்ப்பு கூறினார்.