தாயுடன் ஐ.டி. நிறுவன ஊழியர் பலி

விருதுநகர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தாயுடன் ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2022-09-25 20:08 GMT

விருதுநகர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தாயுடன் ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானார்.

குல தெய்வ கோவில்

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 56). ஆந்திர மாநிலத்தில் சிவில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுடைய மகன் மவுலி (25). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் திருச்செந்தூர் அருகே குரும்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வாடகை காரில் நேற்று அதிகாலை ஈரோட்டில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டார்.

தாய்-மகன் பலி

காரை கோவை சூலுரை சேர்ந்த குணசேகரன்(27) என்பவர் ஓட்டினார். கார் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விருதுநகர்- சாத்தூர் இடையே அக்ரஹாரப்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது. இந்த விபத்தில் முத்துலட்சுமியும், மவுலியும் மயங்கி கிடந்தனர்.

கண்ணனும், குணசேகரனும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மயங்கி கிடந்த முத்துலட்சுமி, மவுலி ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த கண்ணனும், குணசேகரனும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் வச்சகாரப்பட்டி போலீசார் டிரைவர் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்