சொந்த வீட்டில் 27 பவுன் நகைகளை திருடிய ஐ.டி. ஊழியர் சிக்கினார்

கோவையில் காசிக்கு தாய் சென்றபோது சொந்த வீட்டில் 27 பவுன் நகைகளை திருடிய ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-21 19:00 GMT

சாய்பாபாகாலனி

கோவையில் காசிக்கு தாய் சென்றபோது சொந்த வீட்டில் 27 பவுன் நகைகளை திருடிய ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.டி. ஊழியர்

கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி(வயது 50). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இதில் மகன் விக்னேஷ் (29) தனது மனைவியுடன் ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் வசித்து வருகிறார். மேலும் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் அவரது தாயாரிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

புனித யாத்திரை

கடந்த 3-ந் தேதி சாந்தி வீட்டை பூட்டி விட்டு காசிக்கு புனித யாத்திரை சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து 13-ந் தேதி கோவை திரும்பினார். அப்போது வீட்டு பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தங்கை சுமதி என்பவர், வீட்டுக்கு விக்னேஷ், அவரது மனைவி வந்து சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து சாந்தி தனது மகனிடம் விசாரித்தார். அப்போது அவர் நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாந்தி, சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் விக்னேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன. சொந்த வீட்டில் நகை திருடிய வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்