வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விசுவநாதன்
வீரத்தின்விளை நிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளை நிலமாக வேந்தர் ஜி.விசுவநாதன் மாற்றி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
திறப்பு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வரவேற்று பேசினார்.
இதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் ஆகியவற்றை ரிமோட் மூலம் திறந்து வைத்து பேசியதாவது:-
கல்வியின் விளை நிலமாக...
வீரத்தின் விளைநிலமாக விளங்கி கொண்டிருக்கின்ற வேலூரை கல்வியின் விளைநிலமாக வேந்தர் விசுவநாதன் மாற்றி உள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலக வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விசுவநாதன்அளவில் கல்வியில் சிறந்த பல்கலைக்கழகமாக வி.ஐ.டி.யை விசுவநாதன் மாற்றி காட்டியிருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயரை வைத்ததற்காக முதல்-அமைச்சராக இல்லாமல் கலைஞரின் மகனாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சிறுவயது முதல் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அண்ணாவின் எழுத்துகளால் செதுக்கப்பட்டவர் ஜி.விசுவநாதன். இளமையிலேயே திராவிட கொள்கையில் ஊறி இருந்தவர் வேந்தர் விசுவநாதன். 26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இந்தியாவில் இளம்வயதில் எம்.பி.யாக பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவருக்கு ஏறுமுகம் தான்.
தரவரிசை பட்டியலில் முதலிடம்
வேலூரில் 1984-ம் ஆண்டு 180 மாணவர்களுடன் சிறியதாக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. இன்றைக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. 3 மாநிலங்களில் 4 கல்வி வளாகங்கள் உள்ளன. சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தியாவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வி.ஐ.டி. இன்றைக்கு வளர்ந்துள்ளது. 60 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். ஆசிய தரவரிசை மற்றும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி. இடம் பிடித்துள்ளது. கல்லூரிகளை உருவாக்குவது எளிது. அதனை தலைசிறந்த நிலைக்கு கொண்டு வருவது கடினம். அந்த கடினமான பணியை தனிக்கவனம் செலுத்தி செய்து முடித்துள்ளார்.
இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்படும் விருதின் தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சுயநிதி பல்கலைக்கழக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரசியலில் இருந்து கல்லூரியை சேர்த்து நடத்தி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த வெற்றிக்கு அவரின் வாரிசுகளான சங்கர், சேகர், ஜி.வி.செல்வம் ஆகியோரும் முக்கிய காரணம் ஆவார்கள். அவர்கள் தந்தையை போன்று சிறப்பாக செயல்பட்டுள்ளனர். வருகிற தலைமுறைகள் சரியாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது வி.ஐ.டி. ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
ஆராய்ச்சி கூடம்
வேந்தர் விசுவநாதன் கல்விப்பணிகளோடு சேர்த்து தமிழ் பணி ஆற்றுவதை அவர் கைவிடவில்லை. உலக தமிழ் அமைப்பாக தமிழியக்கத்தை நடத்தி வருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் உள்ளே இருந்து அவரை இயக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. குழந்தைகளுக்கு தமிழ் பெயரை தான் வைக்க வேண்டும் என்று வேந்தர் ஜி.விசுவநாதன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருமண சீர்த்திருத்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது மணமக்களிடம், பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை வையுங்கள் என்று நான் கூறி வருகிறேன். அழகு தமிழில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்.
இங்குள்ள ஆராய்ச்சி கூடம் ஆராய்ச்சி கல்விக்கு தலைசிறந்த மையமாக அமைய உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வியில், அறிவியல், சிந்தனை, தெளிவு, ஆற்றலில் தலைசிறந்த ஆளுமையாக வளர்வதற்கு இதுபோன்ற ஆராய்ச்சி கூடங்கள், கல்லூரிகள், விடுதிகளும் ஏராளமாக நமக்கு தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்கும் ஒரு அரசாக நமது திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி
திராவிட மாடல் ஆட்சி என்றால் அனைத்துத் துறை, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வகையில் ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையறிந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உருவாகும் தொழில்களின் திறமைக்கு ஏற்ற இளைஞர்களை உருவாக்கும் கடமை இந்த அரசுக்கு உள்ளது. அதனால்தான் கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி எனது பிறந்தநாளில் அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பாராட்டி கொண்டிருக்கின்றன. புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,730 மாணவிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 889 மாணவிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5,697 மாணவிகள், வேலூர் மாவட்டத்தில் 4,010 மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
கல்வி புரட்சி
தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை மென்மேலும் வளர்ச்சி பெற தனியார் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு வி.ஐ.டி. போன்ற கல்விநிறுவனங்கள் அரசுக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வியும், கலைஞர் ஆட்சியில் கல்லூரி கல்வியும் முன்னேற்றம் அடைந்தது. நமது ஆட்சியில் உயர் கல்வியை தாண்டி ஆராய்ச்சி கல்வியும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியமாக உள்ளது. எனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வி.ஐ.டி. பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சென்னை எப்படி மருத்துவத்தின் தலைநகரம் என்று போற்றப்படுகிறதோ, அதுபோன்று வேலூர் மாநகரம் இங்கு அமைந்துள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் முயற்சியால் கேப்பிட்டல் ஆப் ரிசர்ச் ஸ்டடிஸ் என்று விளங்கும்.
கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. படிக்காமல் முன்னேறிய சிலரை மட்டும் தான் உதாரணமாக காட்ட முடியும். மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். உலக அரங்கில் தமிழக மாணவர்கள் உயர் பதவியில் இருப்பது தான் பெற்றோருக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை. வி.ஐ.டி.யில் பல்வேறு மாநில மாணவர்கள் படிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவதுதான் இந்தியாவிற்கு பெருமை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில், வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலுவிஜயன், முனிரத்தினம், செந்தில்குமார், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.