மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள், சிறிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Update: 2023-06-19 04:43 GMT

காசிமேடு

தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று நள்ளிரவே மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க அதிகளவிலான மீன்பிரியர்கள் குவிவார்கள். மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மீன் சந்தை களை இழந்து காணப்பட்டது.

மீன் வாங்க குவிந்தனர்

மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவிலான பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என நினைத்து அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் காசிமேட்டில் குவிந்தனர். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன் விற்பனையும் சூடுபிடித்தது.

ஆனால் நேற்று குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் மட்டுமே கரை திரும்பினர். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வகையிலான மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டி போட்டு வாங்கினர்

எனினும் சிறிய வகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்ததால் அதிகாலை 2 மணி முதல் ஏல விற்பனையில் பெரிய வியாபாரிகள், சிறிய வியாபாரிகள், மீன் பிரியர்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கிச்சென்றனர். இதனால் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. தடைகாலம் முடிந்து மீன் வரத்து அதிகரித்து மீன்கள் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். எனவே அடுத்த வாரத்தில் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் எனவும் தெரிகிறது.

காசிமேட்டில் நேற்று வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1100-க்கும், சங்கரா - ரூ.300 முதல் ரூ.500 வரை, இறால்(சிறியது)-ரூ.300, இறால் (பெரிய வகை) - ரூ.600, வவ்வால் - ரூ.300 முதல் ரூ.600 வரை, கடமான் - ரூ.600, பாறை - ரூ.350, நெத்திலி - ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்