மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்தது; 1,844 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,844 மாணவ- மாணவிகள் எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,844 மாணவ- மாணவிகள் எழுதினர்.
நீட் தேர்வு
தேசிய தேர்வு முகமை மூலம் மருத்துவ படிப்புக்கு ஆண்டுதோறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. கடந்த ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் 400 பேரும், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 984 பேரும், தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் உள்ள மையத்தில் 504 பேரும் ஆக மொத்தம் 1888 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
1,844 பேர்
இந்த தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதற்காக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதல் 3 மையங்களிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து இருந்தனர். உரிய சோதனைக்கு பிறகு மாணவ- மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது.
இந்த தேர்வில் மாவட்டத்தில் உள்ள 3 மையங்களிலும் மொத்தம் 1,844 பேர் தேர்வு எழுதினர். 44 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வை முன்னிட்டு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.