நீலகிரியில் கனமழை பெய்தது; சாலையில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன
நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. ஊட்டி-கோத்தகிரி சாலை பகுதியில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி: நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. ஊட்டி-கோத்தகிரி சாலை பகுதியில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் கனமழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களுக்கு பலத்த மழை பெய்தது. நீலகிரியில் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து விழுந்தும், வீடுகளும் சேதமடைந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரை விடாமல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து லேசான மற்றும் சாரல் மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்தது.
சாலையில் விழுந்த ராட்சத பாறாங்கற்கள்
ஊட்டியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து சென்ற மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர். கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து சென்றது. மார்க்கெட்டுக்குள் தண்ணீர் வந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பெட்ரோல் விற்பனை தடைப்பட்டது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மடித்துறை என்ற இடத்தில் அமைந்துள்ள மலையின் செங்குத்தான பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து 2 ராட்சத பாறாங்கற்கள் திடீரென உருண்டு சாலையில் விழுந்தது. தொடர்ந்து விழுந்த வேகத்தில் பாறாங்கற்கள், சாலையின் தடுப்பு மீது மோதி அருகில் இருந்த பள்ளத்திற்குள் உருண்டோடின. பாறாங்கல் விழுந்ததில் சாலையில் பெரிய பள்ளமே ஏற்பட்டது. மேலும் சாலை தடுப்பு சேதமடைந்து, அருகில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து கிடந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாறாங்கற்கள் உருண்டு சாலையில் விழுந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரகாஷ், செயற்பொறியாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மண், பாறைகளை அகற்றினர். பின்னர் சாலை பள்ளம், விரிசலை தற்காலிகமாக கான்கிரீட் போட்டு சீரமைத்தனர். தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
வெறிச்சோடிய சுற்றுலாத்தலம்
இதைத்தொடர்ந்து கனமழை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த கனமழையால் மிகவும் குளிர்ச்சியான காலநிலை நீலகிரியில் காணப்படுகிறது. நேற்று ஊட்டியில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 84 சதவீதமாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மதியத்துக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனமழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அய்யன்கொல்லி அருகே எலியாஸ் கடை வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை வெள்ளம் நிரம்பி குளம்போல் காட்சி அளித்தது. இதனால் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம்(மில்லி மீட்டர்)வருமாறு:- ஊட்டி-39, கோத்தகிரி -32, குன்னூர்- 10, பந்தலூர்-47, அவலாஞ்சி- 12, கெத்தை -22 ஆகும்.