கோவை சம்பவத்தை அரசியலாக்குவது தவறு; கனிமொழி எம்.பி.
கோவை சம்பவத்தை அரசியலாக்குவது தவறு எனறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியலாக்குவது தவறானது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மொழி
தமிழக முதல்-அமைச்சர் இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உணவான ஓலைப்புட்டு தயாரித்து விற்பனை செய்வதற்காக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்கள் நடத்துகின்றனர்.
தி.மு.க. தமிழை அழிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். யார் தமிழை வளர்க்கிறார்கள், யார் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்றும், தொடர்ந்து எங்கள் மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நிலையை யார் உருவாக்கி இருக்கிறார்கள் என்றும் மக்களுக்கு தெரியும். யார் தமிழர்களுக்கு எதிரானவர்கள், தமிழ் மொழிக்கு எதிராக இந்தியை கொண்டு வந்து மறுபடியும் திணிக்கும் முயற்சியை யார் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.
அரசியல் கூடாது
கோவையில் நடந்து உள்ள சம்பவம் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதற்கு முதல்-அமைச்சர் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு நடந்து விட்டது. அதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. பா.ஜனதா இதனை தொடர்ந்து அரசியலாக்க வேண்டும், மக்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது மிக தவறானது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.