மதுரை விமானநிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல-2 எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மதுரை விமானநிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என ஆலோசனை குழு கூட்டத்தில் 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2023-10-10 20:14 GMT

திருப்பரங்குன்றம்,

ஆலோசனை குழு கூட்டம்

மதுரை விமான நிலையத்தில், விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் ஆலோசனை குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன், மதுரை மாநகர காவல் துணை கமிஷனர் பிரதீப், விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு விமான நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். பைலேட்டர் (இரு நாட்டு) ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ஏற்புடையதல்ல

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் கூறுகையில்,

மத்திய அரசு தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தை புறக்கணித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியை நானும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்தோம். 24 மணி நேர சேவை விமான நிலையமாக மாற்றவும் சர்வதேச தரமாக உயர்த்தவும் கோரிக்கை வைத்தோம். ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை எனக்கூறி 6 மாதங்களுக்கு மேலாகியும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குறைவாக உள்ளனர் என மழுப்பல் காரணங்களை கூறி தமிழ்நாட்டில் கிடைக்க வேண்டிய சலுகைகளை செய்ய மறுக்கிறது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையை அதிகரிக்க வேண்டியது மத்திய அரசின் வேலை. ஆனால் அதை செயல்படுத்தாமல் உள்ளது. தற்போது கூடுதல் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.

சிங்கப்பூருக்கு தினசரி விமானம்

சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில்,

வாரத்திற்கு 3 நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வருகின்ற 22-ந் தேதி முதல் தினசரி விமானமாக இயக்கப்பட இருக்கிறது.

மதுரை விமானநிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்குகிற விஷயத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள் என்பது முழுவதும் முடிவடைந்து இருக்கிறது.

2 குளங்களினுடைய சிறு பகுதி வகை மாற்றம் செய்யப்பட வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது முடியும்."டொமஸ்ட்டிக்" விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. நமக்கு நியாயமான உரிமைகளை தருவதிலே தொடர்ந்து தயக்கம் மறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. வாரணாசி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

எனவே இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக்காக செய்யப்படுகிற ஒரு வஞ்சகம். போதிய பாதுக்காப்பு படை வீரர்கள் இல்லாமல் எப்படி இந்திய விமானத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல் அண்டர் பாஸ் முறையிலும் மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்