சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சுவர் ஏறி குதித்தது ஏற்புடையதல்ல; அமைச்சர் செந்தில் பாலாஜி
தனது சகோதரர் வீட்டில் சோதனைக்காக வருமான வரித்துறையினர் சுவர் ஏறி குதித்தது ஏற்புடையதல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
எனது சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த சோதனை குறித்து தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகத் தெளிவான விளக்கங்களை அளித்தார். சோதனை இடங்களில் நடந்த விரும்பத்தகாத செயல்கள் குறித்தும், அது எதனால் ஏற்பட்டது என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிது அல்ல. சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி பிரசாரத்துக்கு முன்பாகவும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்டோம்.
முழு ஒத்துழைப்பு
இப்போதும் எனது வீடு தவிர சகோதரர், உறவினர், நண்பர்களின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருக்கிறது. சோதனை நடக்கும் இடங்களைச் சேர்ந்த அனைவருமே முறையாக வருமான வரி செலுத்தி வருபவர்கள் ஆவார்கள்.
வருமான வரி அதிகாரிகள் தொடர்பான விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து, உடனடியாக கரூருக்கு நான் தொடர்புகொண்டு, சோதனை நடக்கும் இடங்களில் யாரும் இருக்கக்கூடாது, முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கூறினேன். உடனே அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராக இருக்கிறோம். இந்த சோதனை முழுமையாக நடந்து முடிந்த பிறகு, அங்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன, என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பதை முழுமையாக கூறுவேன்.
ஏறி குதித்து சென்ற அதிகாரிகள்
காலையில் எனக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது. அதிகாலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், சோதனைக்கு வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர். அவர்கள் அழைப்புமணியை அடித்துவிட்டு சற்று நேரம் வீட்டின் முன்பு காத்திருக்கவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் முகத்தை கழுவிவிட்டு வந்து கதவைத் திறப்பதற்கு முன்பதாகவே 'கேட்'டில் ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றிருக்கின்றனர். அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பற்றி விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை முடியும் வரை, சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுதான் கடமையாகும்.
எங்களுக்கு அறிமுகமானவர்கள் மட்டுமல்லாமல் அறிமுகமற்றவர்களின் இடங்களுக்கும் வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர். 40-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை என்று கூறப்பட்டாலும், எந்தெந்த இடங்களில் நடைபெற்றது என்ற தகவல்கள் வந்த பிறகுதான் சரியான எண்ணிக்கை தெரியவரும்.
வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் கொடுத்துள்ளார். சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது பற்றி ஆர்.எஸ்.பாரதி கருத்து கூறியுள்ளார். அதே கருத்தை இதற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
பாதுகாப்பு கேட்கவில்லை
வருமான வரித்துறையினரின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு சி.ஆர்.பி.எப். துணை ராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் எந்த பாதுகாப்பையும் போலீசிடம் கேட்கவில்லை என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியிருக்கிறார். கேட்காமல் பாதுகாப்பு கொடுக்கமாட்டார்கள்.
வருமான வரி சோதனையை நேர்மையாக எதிர்கொள்வதற்காகவும், முழுமையான சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அங்கு யாரும் இருக்கக்கூடாது என்று ஒரேயொரு போன் அழைப்பின் மூலம் அனைவரையும் விலக கூறினேன். ஆனால் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் சோதனை நடந்தபோது, கட்சி நிர்வாகிகளை வரவழைத்து, பந்தல் அமைத்து, சாப்பாடு போட்ட நிகழ்வெல்லாம் நடந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடந்தபோது எப்படியெல்லாம் கதறினார்கள், ஜெயக்குமார் அப்போது என்ன கருத்தை தெரிவித்தார், இப்போது என்ன கூறுகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
ஏற்புடையதல்ல
யாரும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்ய தயாராக உள்ளனர். ஆனால் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே செல்வது ஏற்புடையதல்ல. அதுபோன்றே விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளன.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் முதன் முதலாக போட்டியிட்ட போது வேட்புமனுவில் காட்டிய சொத்துகளில் சிலவற்றை விற்றிருக்கிறேன். ஆனால் 2006-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒரு சதுரஅடி நிலத்தைக்கூட கூடுதலாக நானோ எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வாங்கவில்லை, பதிவு செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையில் எப்போதும் ஈடுபடமாட்டோம்.
தம்பி மாமியார் சொத்து
எனது தம்பியின் மாமியார் தனது மகளுக்கு (தம்பி மனைவிக்கு) சொத்துகளை தானமாக கொடுத்தார். கணவர் இறந்த பிறகு தன்னிடம் உள்ள சொத்துகளை பிள்ளைகளுக்கு தாயார் கொடுப்பது இயல்பானதுதான்.
தம்பி மனைவி பெயருக்கு வந்த இடத்தில் வீடு கட்டப்படுகிறது. ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மை தெரியாமல் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஒரு லட்சம் கோடி ஊழலா?
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடக்கும் என்று ஏற்கனவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாக சொன்னால், அவர் முன்மொழிந்த கருத்துகளை நான் வழிமொழிகிறேன். ஆனால் நான் இருக்கும் தலைமைச் செயலகம், அரசு அலுவலகம் என்பதால் வருமான வரித்துறையினரின் சோதனை பற்றி மட்டும் விளக்கம் தந்துள்ளேன். முழு சோதனை நடந்து முடிந்த பிறகு வேறிடத்தில் அரசியல் கேள்விகளுக்கும் பதில் தருவேன்.
டாஸ்மாக் விற்பனை ரூ.45 ஆயிரம் கோடி என்ற அளவில்தான் உள்ளது. ஆனால் அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக ஒருவர் கருத்து கூறுகிறார். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி அதிகாரிகளிடம் விசாரித்து தெரிந்துகொள்ளாமலேயே செய்திகள் வெளியிடப்படுவதுதான் பிரச்சினையாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.