ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும்தூத்துக்குடி பழைய பஸ்நிலையம்விரைவில் பயன்பாட்டிற்கு வரும்:மேயர் ஜெகன்பெரியசாமி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனறு மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்தார்.;
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேயர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்து வருகிறார். மேலும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் ரூ.52 கோடி மதிப்பீல் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு மாடி கட்டிடத்துடன் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய பஸ்நிலையத்தை மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைவில் திறக்கப்படும்
அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பஸ்நிலைய பணிகளானது நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பஸ்நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த வளாகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் முறையாக செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், பொறியாளர் பாஸ்கர், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பிரசாரம்
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார கலை பயணத்தை நடத்தியது.
இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் தலைமை தாங்கி, கலை பயணத்தை தொடங்கி வைத்தார். ஆணயாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) ஹேமந்த் ஜோசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து கலைக்குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ச.வெள்ளைச்சாமி, ஆசிரியர் அருள்சகாயம் ஆகியோர் செய்து இருந்தனர்.