தமிழர் பண்பாட்டு பெருமையை மாணவர்களை உணர செய்வது சமூக கடமை- கலெக்டர் மகாபாரதி
தமிழர் பண்பாட்டு பெருமையை மாணவர்களை உணர செய்வது சமூக கடமை என கலெக்டர் மகாபாரதி கூறினார்.
தமிழர் பண்பாட்டு பெருமையை மாணவர்களை உணர செய்வது சமூக கடமை என கலெக்டர் மகாபாரதி கூறினார்.
15 பேருக்கு விருது
தமிழக அரசு சார்பில் சீர்காழி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'மாபெரும் தமிழ்க்கனவு' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளக்கம் தந்து, வினாக்கள் கேட்ட மாணவ, மாணவிகள் 15 பேருக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி ஆகிய விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் வளரும் தலைமுறையினரை முழுமையாக தெரிந்து கொள்ள செய்வது, சமூகத்தின் கடமை.
பண்பாட்டு பெருமை
தமிழர் பண்பாட்டின் பெருமையை கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான சமூக கட்டமைப்பின் ஒரு முக்கியமான கடமையாகும். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் தலா 1,000 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 420 பேர் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தமிழ் இணைய கல்விக் கழக ஒருங்கிணைப்பளர்கள் செல்லப்பா, சிங்காரவேலன். உதவி கலெக்டர் அர்ச்சனா, யுரேகா, விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.