விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2022-11-13 18:45 GMT

வடகிழக்கு பருவமழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இதற்கிடையே கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாகவும் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் கன மழையும் கொட்டியது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மழைநீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் அவதி

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று விடிய, விடிய தொடர்ந்தது. நேற்று மதியம் வரை மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு வெயில் அடிக்க தொடங்கியது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் வாய்க்கால் இல்லாத இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம்நகர், கூத்தப்பாக்கம் ஜெயலட்சுமி நகர், சக்திநகர், ஜனார்த்தனன்நகர், தனம்நகர், பாதிரிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம், சிவசக்திநகர், மஞ்சக்குப்பம் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு பின்புறம் உள்ள ஆனந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அந்த நீரை பொதுமக்கள் வடிய வைத்து வருகின்றனர். பொக்லைன் எந்திரம் மூலமாகவும் வாய்க்கால் அடைப்புகள் சரி செய்யப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணிகள் நடக்கிறது.

சேத்தியாத்தோப்பு அடுத்த கோதண்ட விளாகம் கிராமத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அங்குள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கால்வாயை சீரமைக்க கோரிக்கை

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தில் இருந்து சிப்காட் செல்லும் சிதம்பரம் சாலை முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அவ்வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் உள்ள சிறு குறு தொழில் வர்த்தக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் கண்ணாரப்பேட்டை மலை பகுதியில் உள்ள அக்ரகாரத்து ஏரியின் உபரி நீர் மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழை நீர், பிள்ளையார் மேடு வழியாக வந்து பச்சையாங்குப்பம் பிரதான சாலையை கடந்து, பின்னர் ஈச்சங்காடு வழியாக, சங்கொலிக்குப்பம் சென்று கடலில் கலக்கும் கால்வாய் இந்த வழியாக செல்கிறது. அது தற்போது, ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் உள்ளது. இதன் காரணமாக மழை நீர் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மழை அளவு

இதேபோல் விருத்தாசலம், வானமாதேவி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர், சிதம்பரம், லக்கூர் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 58.3 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக பரங்கிப்பேட்டையில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 9.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்