ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்றவர் கைது
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி (வயது 55). இவர், மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி (வயது 55). இவர், மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பல்லாவரம் தனிப்படை போலீசார் நேற்று காலை சூர்ய மூர்த்தியின் செல்போன் சிக்னலை சோதனை செய்தனர். அதில் அவர் மெரினா கடற்கரையில் இருப்பதாக காண்பிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று சூர்ய மூர்த்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5.800 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.கொடுங்கையூரை சேர்ந்த யூனஸ் என்பவரிடம் இருந்து அந்த போதை பொருளை சூர்யமூர்த்தியும், ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் சேர்ந்து வாங்கி வந்து, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.சூர்ய மூர்த்தியிடம் இருந்து பறிமுதல் செய்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.1.80 கோடி ஆகும். மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சூர்யமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.