ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது
வேலூர் தொரப்பாடியில் ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். அவர் திருவண்ணாமலையில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
ஐ.டி. ஊழியர் வீட்டில் திருட்டு
வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42), ஐ.டி. ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மகதி என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 3-ந் தேதி பாலாஜி வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிக்கொண்டு, மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
உறவினர் கைது
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் திருவண்ணாமலையில் தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.