கடம்பூரில் தனிபட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

கடம்பூரில் தனிபட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-17 14:42 GMT

கயத்தாறு:

கடம்பூரில் தனிப்பட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ைகது செய்யப்பட்டார்.

தனிப்பட்டா கேட்டு...

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை அடுத்த சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் (வயது 58). இவர் தனது கிராமத்தில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து 3 ஏக்கர் நிலம் வாங்கினார்.

பின்னர் அதற்கு தனிப்பட்டா கேட்டு கடந்த 8-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளையும் சந்தித்து முறையிட்டார்.

லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்

அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு ராகவனிடம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராகவன், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை தொடர்பு கொண்டு ராகவன் மீண்டும் பேசினார். அப்போது தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.14 ஆயிரம் தர சம்மதிப்பதாக ராகவன் கூறினார்.

கைது

இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.14 ஆயிரத்தை ராகவனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த வெங்கடேச பெருமாளிடம் ராகவன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தளவாய் ஜம்புநாதன் மற்றும் போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை பிடித்து கைது செய்தனர்.

தனிப்பட்டா வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்