பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?

பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா? என ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-20 19:30 GMT

கல்வித்துறையில் தமிழகம் பெற்று வரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அனைவரும் சமம்

பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடையை காமராஜர் கொண்டு வந்தார்.

குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964-1965-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும்.

சமத்துவப்பார்வை

நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும்.

1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர். இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

ஒரே அணி

ராஜபாளையத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் நாகராஜ்:- பள்ளியில் சீருடை அணிந்து வரும் மாணவர்களை கண்டாலே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஏனெனில் மாணவர்கள் அனைவரும் ஒரே அணியாக பொருளாதார ஏற்றத்தாழ்வு வித்தியாசமின்றி காணப்படுவார்கள். சீருடை அணிந்து வகுப்பில் அமர்ந்து படிக்கும் பொழுது தமிழ்நாடு முழுவதும் சீருடை ஒன்றாக இருப்பினும் அந்தந்த பள்ளிகளுக்கான முத்திரைகளை சட்டை பையில் வைத்து தைக்கும் போது எந்த பள்ளி என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது. சீருடை திட்டம் அனைத்து பள்ளிகளிலும் இருப்பது வரவேற்கத்தக்கது.

பள்ளிகளில் ஆய்வு

திருத்தங்கல்லை சேர்ந்த மைக்கேல்:-

சிவகாசி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாண விகளுக்கு அரசு 3 விதமான சீருடைகளை அறிவித்துள்ளது. இதில் அரசு பள்ளிகளில் படித்து பள்ளியில் வழங்கப்படும் மதியம் உணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 20 ஆயிரம் பேருக்கு அரசு சார்பில் சீருடைகள் வழங்கப்படுகிறது.

இந்த சீருடைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. சில அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள சீருடைகளை மாணவ, மாணவிகள் அணிய கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு என ஒரு தனிச்சீருடையை அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். சீருடை விஷயத்தில் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆய்வை உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள் நடத்த வேண்டும்.

தனி மரியாதை

தாயில்பட்டி அருகே உள்ள சக்திவேல் நகரை சேர்ந்த ஜனனி, காயத்ரி:-

பள்ளி நிர்வாகம் கூறிய அறிவுைர படி நாங்கள் சீருடை அணிந்து செல்கிறோம். பள்ளி சீருடையில் செல்லும் போது எங்களுக்கு தனி மரியாதை கொடுக்கின்றனர். ஏற்றத்தாழ்வு மறைகிறது. சீருடை விஷயத்தில் ஆசிரியர்கள், பெற்ேறார்கள் தனி கவனம் செலுத்துகின்றனர்.

பள்ளி சீருடைைய அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாக மாற்றினால் நன்றாக இருக்கும்.

நிறமாற்றம் வேண்டும்

ராஜபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி உமாமகேஸ்வரி:- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரே மாதிரியான பள்ளி சீருடை அணிந்து செல்கின்றனர். எனினும் மற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் சீருடை வித்தியாசப்படுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மனதளவில் ஒரு விதமான தயக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடை அணிந்தால் மாணவர்கள் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகளில் நிறமாற்றம் வந்தால் வரவேற்கத்தக்கது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு, அரசாங்கமே மாணவர்கள் உடல் அமைப்பை அளந்து சீருடை தைத்து வழங்கினால் தரமாக இருக்கும்.

ஏற்றத்தாழ்வு

சல்வார்பட்டி கந்தசாமி:-

பள்ளி சீருடை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை வந்தால் நன்றாக இருக்கும்.

ஏற்றத்தாழ்வு நீங்கதான் சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதலால் தனியார் பள்ளி, அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி என வேறுபாடு கருதாமல் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிவிக்க வேண்டும். அதேேபால மாணவர்கள் இறுக்கமாக தைத்து சீருடை அணிய ஆசிரியர்கள், பெற்றோர் அனுமதி வழங்க கூடாது.

ஒரேமாதிரி

ஆலங்குளத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தங்கப்பாண்டி:-

சீருடை திட்டத்தை வரவேற்கிறேன். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை திட்டம் கொண்டு வந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பள்ளி சீருடையுடன் எங்கு சென்றாலும் எங்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறது. சீருடை விஷயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கவனம் செலுத்தும் ஆசிரியர்கள்

சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி:-

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்தே பள்ளிக்கு வருகின்றனர். மேலும் மாநில பள்ளிகல்வித்துறையும் சத்துணவு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே சீருடை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த போதிலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சீருடை வழங்கி வருகிறது. மாவட்டத்தில் தனியார் பள்ளிகளிலும் நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகள் சீருடை அணிவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

அரசு பள்ளியில் ஓரிரு மாணவர்கள் சீருடை அணியாமல் வந்தாலும் அவர்களை உடனடியாக அழைத்து பேசி சீருடை அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் சீருடை அணிந்து வரும் நிலையை ஏற்படுத்தி விடுகிறோம். பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிப்பதால் அவர்கள் உடனடியாக தங்கள் குழந்தைகள் சீருடை அணிவதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறார்கள்.

கூடுதல் கவனம்

கொங்கன்குளம் இல்லத்தரசி ஜோதிலட்சுமி:-

பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சீருடையை வாங்கி கொடுக்கிறோம். ஒரு சில மாணவர்கள் பள்ளி சீருடையை கூட அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தைக்கின்றனர். அவ்வாறு தைத்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

சீருடை திட்டம் என்பது ஒரேமாதிரியாக அனைவரும் இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஆதலால் சீருடை விஷயத்தில் ஆசிரியரும், பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அரசு முடிவு

தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.

தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது'.

இவ்வாறு அவர்கள் கூறினர். 


4 செட் சீருடைகள்

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமர்:-

தமிழக அரசு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டிற்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. கல்வியாண்டு தொடக்கத்திலேயே 2 செட் உடைகள் வழங்கப்பட்டு விடும்.

மேலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரைபயிலும் மாணவ-மாணவிகளும் சீருடை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சீருடைகள் அணிந்து பள்ளிக்கு செல்வதை விரும்பும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்பதில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் கவனத்தில் உள்ளனர். எனவே மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் சீருடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இதில் மாற்றம் ஏதுமில்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்