தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாமல் இருப்பதுதான் திராவிட மாடலா?
தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாமல் இருப்பது தான் திராவிட மாடலா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறிக் கொள்வதிலும் முனைப்புக் காட்டும் முதல்-அமைச்சர், தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் சட்ட விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கின்றாரா என்றால் இல்லை.
மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உருவாக்கி உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள், மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் தமிழ்நாடு அரசின் அசாதாரண அரசிதழில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான தமிழாக்கம் வெளியிடப்படவில்லை.
இதுதான் திராவிட மாடலா?
மாநில வரைவு விதிகளின் தமிழாக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆங்கிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுப்பையும் சாதாரண தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று.
மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாத தி.மு.க. அரசின் நடவடிக்கை 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்பது போல் உள்ளது. ஒரு வேளை இதுவும் 'திராவிட மாடல்' போலும்! தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி மூன்று மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடவும், இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே நேரத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.