கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?-பக்தர்கள் கருத்து
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கோவில்களில் அன்னதானம்
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை ெபற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும், அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாள் முழுவதும் உணவு
தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?. சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது சாப்பாடு நிறைவாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
சுவையாக உள்ளது
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தனியாக இருக்கைகள் போடப்பட்டு அன்னதானம் பரிமாறப்படுகிறது. சாதம், சாம்பார், ரசம், மோர் மற்றும் 2 காய் வகைகள் கூட்டுடன் அன்னதானம் தினமும் வழங்கப்படுகிறது. இதனை தினமும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் சாப்பிட்டு வருகின்றனர். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட திருமயத்தை சேர்ந்த பானு:- ''அன்னதானம் நன்றாக இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியாக இருக்கும் போது இந்த அன்னதானத்தில் சாப்பிட முடிகிறது. இதுதவிர ஏழைகளும் பசியாற்றுவதற்கு அன்னதானத்தில் சாப்பிட முடிகிறது. இந்த அன்னதான திட்டம் நல்லமுறையில் செயல்படுத்தப்படுகிறது. இது வரவேற்கக்கூடியது தான்''.
ராமையா:- ''கோவிலில் அன்னதானம் நன்றாக இருக்கும். நான் அவ்வப்போது வந்து சாப்பிடுவேன். பொதுமக்கள் பலரும் வந்து உணவு சாப்பிடுகின்றனர். சாப்பாடு நல்ல முறையில் போடப்படுகிறது. நல்ல ருசியாகவும், சுகாதாரமாகவும் உள்ளது''.
2 வகையான கூட்டு
அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி:- அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் டோக்கனை வாங்கி அன்னதானம் சாப்பிட்டேன். அன்னதானத்தில் 2 வகையான கூட்டு வழங்கப்படுகிறது. போதுமான அளவு சாதம், சாம்பார், ரசம், மோர் ஆகியவற்றை வழங்குகிறார்கள். மேலும், குறித்த நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வயிறு நிறைய சாப்பிட்டேன்.
மன நிறைவு
ஆரியூரை சேர்ந்த முத்துசரவணன்:- அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வழங்கும் அன்னதானத்தை சாமி தந்த பிரசாதமாக கருதி சாப்பிடுகிறோம். இதனால் மனம் நிறைவு ஏற்படுகிறது. ஆனால் குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. எனவே பக்தர்களின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினால் நன்றாக இருக்கும். மேலும் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அன்னதான திட்டத்திற்கும் நிதி வழங்கினால், பொதுமக்களுக்கு தாரளமாகவும், மன நிறைவாகவும் உணவு வழங்குவார்கள். கோவில் வளாகத்திற்குள் உணவு வழங்கப்படுகிறது. இதனை மாற்றி அன்னதான கூடத்திற்கு தனி இடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
16 கோவில்களில் அன்னதானம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், பெரம்பூர் வீரமகாளியம்மன் கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், மண்டையூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவில், விராலிமலை சுப்பிரமணியசாமி கோவில், கறம்பக்குடி சுகந்தபரிமளேஸ்வரர் கோவில், பேரையூர் நாகநாத சாமி கோவில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில், ஆவுடையார் கோவில் ஆத்மநாதசாமி கோவில், இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில், திருவேங்கைவாசல் வியாக்புரீஸ்வரர் கோவில், கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவில், மணமேல்குடி அருகே வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில், நெடுங்குடி கைலாசநாதர் கோவில் என 16 கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் தலா 100 பேர், 50 பேர், 25 பேர் என கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை பொருத்து உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் தமிழக அரசின் சார்பில் தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும், ஏழை, எளிய மக்களும் சாப்பிட்டு செல்கிறார்கள்.
அன்னதான திட்டத்தில் தனிக்கவனம்-அதிகாரி தகவல்
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.5 ஆயிரத்திற்கு வருமானம் குறைவாக உள்ள கோவில்கள் மொத்தம் 930 உள்ளன. வருமானம் அதிகமாக கொண்ட கோவில்களில் பட்டியலில் தேவஸ்தான கோவில்கள் உள்பட மொத்தம் 385 கோவில்கள் உள்ளன. இவை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் பக்தர்கள் அதிகம் வருகை தரக்கூடிய கோவில்கள், பிரபலமான கோவில்களில் மதியம் ஒரு வேளை அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கோவில் செயல் அலுவலர் நிர்வாகியாக செயல்படுகிறார். அன்னதான திட்டத்திற்கு தனியாக வரவு, செலவு கணக்கு கையாளப்படுகிறது. நன்கொடையாளர்கள் அளிக்கும் நன்கொடைகளும் பயன்படுத்தப்படுகிறது. அன்னதான உண்டியல் காணிக்கையில் கிடைக்கும் தொகை மூலமும் அன்னதானம் போடப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பிரத்யேகமாக தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அன்னதானத்தில் சாதம், 2 காய்கறிகள் வகையில் கூட்டு, சாம்பார், ரசம், மோர் ஆகியவற்றுடன் சாப்பாடு நல்ல முறையில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது'' என்றார்.