கூட்டில் இறந்து கிடந்த இருவாச்சி

கல்லாறு பழப்பண்ணையில் இருவாச்சி பறவை கூட்டில் இறந்து கிடந்தது.

Update: 2023-05-14 22:00 GMT

மேட்டுப்பாளையம்

கல்லாறு பழப்பண்ணையில் இருவாச்சி பறவை கூட்டில் இறந்து கிடந்தது.

இருவாச்சி பறவை

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் தோட்டக்கலை பழப்பண்ணை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக அரிய வகை பறவையான இருவாச்சி பறவை அங்கும், இங்கும் வண்ண பூஞ்சிறகை விரித்து பறந்து திரிந்தது. இது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இந்தநிலையில் பழப்பண்ணையில் உள்ள இலவம்பஞ்சு மரப்பொந்தில் ஆண், பெண் இருவாச்சி பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. பின்னர் பெண் இருவாச்சி குஞ்சு பொறித்தது.

இருவாச்சி பறவைகள் அத்திப்பழம் மற்றும் புழு பூச்சிகளை எடுத்து வந்து அலகால் குஞ்சுக்கு ஊட்டி கண்ணின் இமை போல் பாதுகாத்து வந்தது. இதை அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் உத்தரவின் பேரில், வனப்பணியாளர்கள் இருவாச்சி பறவைகளை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மரப்பொந்தின் கூட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இருவாச்சி குஞ்சின் அசைவுகள் எதுவும் தெரியவில்லை.

குஞ்சு இறந்தது

மேலும் ஆண், பெண் இருவாச்சி பறவைகள் மரப்பொந்தின் கூட்டின் அருகே அமர்ந்ததே தவிர, குஞ்சுக்கு இரை ஊட்ட முன் வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த வனப்பணியாளர்கள் ஏணி மூலம் ஏறி மரபொந்துக்குள் பார்த்ததில், இருவாச்சி பறவையின் குஞ்சு இறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் வனப்பணியாளர்கள் இருவாச்சி பறவையின் குஞ்சை தினமும் கண்காணித்து, அதனை காப்பாற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகள் வீணானது.

பின்னர் இறந்த இருவாச்சி குஞ்சை மீட்கப்பட்டு, வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின், வன கால்நடை டாக்டர் சுகுமாரன் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் இறந்த இருவாச்சி குஞ்சு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

வயிற்றில் அத்திப்பழம்

இதுகுறித்து வன கால்நடை மருத்துவர் டாக்டர் சுகுமாரன் கூறும்போது, இறந்த இருவாச்சி பறவையின் வயிற்றில் அத்திப்பழம் இருந்தது. இந்த குஞ்சு இறந்து ஒரு நாள் இருக்கலாம். உடற்கூறு பரிசோதனை அ6றிக்கை கிடைத்த பின்னர் தான் குஞ்சு இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றார். கல்லாறு பழப்பண்ணையில் மரப்பொந்தின் கூட்டில் இருந்த இருவாச்சி பறவை இறந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆண் இருவாச்சி பறவை இறந்தால், பெண் இருவாச்சி பறவை உயிர் துறக்கும். அதேபோல் பெண் இருவாச்சி பறவை இறந்தால், ஆண் இருவாச்சி பறவை உயிர் துறக்கும். மரப்பொந்துகளில் கூடு கட்டி இணை பிரியாமல் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்