பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

Update: 2022-11-19 17:55 GMT

72 இடங்களில் வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, அக்னியாறு, அம்புலியாறு பகுதிகளில் ஏரி, கண்மாய், குளங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மொத்தம் 452 எண்ணிக்கையில் உள்ளது. இந்த சங்கத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக நடைபெறுவதற்கு அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் போட்டியின்றி தேர்வானவர்கள் தவிர, வேட்பு மனு தாக்கல் செய்யப்படாத இடங்கள் தவிர 58 தலைவர் பதவிக்கு 133 பேர் போட்டியிட்டனர். 29 உறுப்பினர்கள் பதவிக்கு 59 பேர் போட்டியிட்டனர். இதற்கு 72 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்களாக தகுதியுள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடியில் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 422 வாக்காளர்களில் 151 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்ட நிலையில் துரைராஜ் 92 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட மணிவண்ணனுக்கு 59 வாக்குகள் கிடைத்தது.

இலுப்பூர்

இலுப்பூர் தாலுகாவில் பாசன குளங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையொட்டி தாசில்தார் வெள்ளைச்சாமி, தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குடுமிநாதன் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தனர்.

விராலிமலை, ஆவுடையார்கோவில், ஆலங்குடி

விராலிமலை தாலுகா மீனவேலி அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 213 வாக்காளர்களில் 88 வாக்குகள் பதிவாகி இருந்தது. மீனவேலி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆவுடையார்கோவிலில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 7 தலைவர்கள், 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ெவற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் 104 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

வடகாடு

வடகாட்டில் நீர் பாசன சங்கத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. விவசாயிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களித்தனர்.

முழக்கமிட்ட முதியவர்

கறம்பக்குடியில் தள்ளுவண்டியில் அமர்ந்தபடி ஓட்டு போட வந்த 80 வயதை தாண்டிய முதியவர் வாக்குச்சாவடி அருகே சென்றபோது குளம்தான் நமக்கு சோறு போடுது, குளத்தை காக்கனும், குளத்தை காக்கனும் என முழக்க மிட்டபடி சென்றார். தள்ளாத வயதிலும் விவசாயத்தின் மீதும், இயற்கை வளங்களை காப்பதிலும் முதியவரான விவசாயி காட்டிய ஆர்வத்தை பார்த்து அங்கிருந்த மற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் யார் ஜெயிச்சாலும் நல்லது பண்ணுங்கப்பா என கூறியபடி அவர் ஓட்டுபோட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்