அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு
விருகாவூர் அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 6-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுமார் 162 பேர் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட உதவி அலுவலர் தலைமையில் மாணவர் சேர்க்கை தேர்வு நடைபெற்றது. இதில் 80 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கான பட்டியல் நேற்று முன்தினம் பள்ளியில் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை.
வாக்குவாதம்
இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி தலைமை ஆசிரியர் ஜெயவேல் (பொறுப்பு) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதனை ஏற்று மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அ்ங்கு பரபரப்பு ஏற்பட்டது.