தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் முதலீடுகள் தேடி வருகின்றன-முதல்-அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் முதலீடுகளும் தேடி வருகிறது என்று திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-05-31 19:01 GMT

திருச்சி, ஜூன். 1-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் முதலீடுகளும் தேடி வருகிறது என்று திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சியில் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு திடீரென சென்று அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டதோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு இரவு தங்கினார். அதன்பிறகு நேற்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருச்சி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

7 உறுதிமொழிகள்

கடந்த 2 நாட்களாக காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். எதற்காக இந்த சுற்றுப்பயணம் என்றால் நீர் ஆதார பணிகளை பார்வையிட்டு அதை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் இந்த பயணம் மேற்கொண்டேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இதே திருச்சியில் மாநில மாநாடு போல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 7 உறுதிமொழிகளை அறிவித்தேன்.

அதில் 1.வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, 2.மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி, 3.குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், 4.அனைவருக்கும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம், 5.எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், 6.உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கைத்தரம். 7.அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய 7 உறுதிமொழிகளை கொடுத்தேன். கடந்த ஓராண்டில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிலையில் உள்ளது என்பதை யாரும் மறுக்கமாட்டீர்கள்.

அந்தவகையில் மகசூல்பெருக்கம் மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி எப்படி நிறைவேறி கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கத்தான் டெல்டா பகுதியில் மின்னல் வேக சுற்றுபயணத்தை மேற்கொண்டு வந்து இருக்கிறேன். கடந்த ஆண்டு மகசூல் பெருகியது. அதில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள். காவிரி டெல்டா பாசன மாவட்டங்களாக உள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடந்த ஆண்டு இந்த மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ரூ.65 கோடியில் 4 ஆயிரத்து 61 கி.மீ.தூரத்துக்கு அனைத்து நீர்வழித்தடங்களையும் தூர்வாரும் வகையில் 647 பணிகளை செயல்படுத்தினோம். அதன் உரிய நாளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ரூ.61 கோடியே 9 லட்சத்துக்கு குறுவை தொகுப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு குறுவையில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.

இதே சாதனையை இந்தாண்டும் தொடர்ந்து ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். இந்தாண்டு பருவமழைக்கு முன்பே டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 964 கி.மீ.தூரத்துக்கு தூர்வாருவதற்காக 683 பணிகளை விரைவாக முடிக்க நான் உத்தரவிட்டு இருந்தேன். முதல்கட்டமாக வருவாய்த்துறை ஒத்துழைப்போடு அனைத்து நீர்நிலைகள் எல்லைகளும் அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு, இந்த பணிகள் எல்லாம் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தொடங்கப்பட்டது.

4 ஆயிரத்து 418 கி.மீ தூரத்துக்கு பணிகள்

பணிகள் தொடங்கியதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களும் பணிகளை மேற்கொண்டார்கள். 865 கனரக எந்திரங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டது. அந்த பணிகள் இன்றுடன் (நேற்று) முடிவடைந்து நீர்வழிப்பாதைகள் தூர்வாரும் பணிகளை மிக சிறப்பாக முடித்துள்ளோம்.1,580 கி.மீ.நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 85 லட்சத்தில் 19 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் ரூ.18 கோடியே 75 லட்சத்தில் 90 பணிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 48 லட்சத்தில் 40 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியில் 16 பணிகளும், புதுக்கோட்டையில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் 20 பணிகளும், தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடியில் 170 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடியில் 115 பணிகளும், நாகப்பட்டினத்தில் ரூ.3 கோடியே 46 லட்சத்தில் 30 பணிகளும், மயிலாடுதுறையில் ரூ.8 கோடியே 70 லட்சத்தில் 49 பணிகளும், கடலூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 50 லட்சத்தில் 134 பணிகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 418 கி.மீ.தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சாதனை

குறுவை சாகுபடிக்கு வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பே மே மாதம் 24-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலேயே மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது வரலாற்றில் இதுதான் முதல்முறை. இந்த வரலாற்று சாதனை இந்தஆண்டு தான் நிகழ்ந்துள்ளது. இதனால் டெல்டாமாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம்ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளநீரில் மூழ்காமல் காக்கப்படும். நிலத்தடி நீர் உயருவதால் கோடைபயிர்வகைகளையும் அதிகஅளவில் சாகுபடி செய்தவதற்கான வாய்ப்பும் ஏற்படும். இன்றைய தேதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 352 ஏக்கரில் குறுவை சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை உங்களுக்கே தெரியும். ஆனாலும் உழவர்பெருமக்களுக்கான உதவிகளை செய்வதில் எப்போதும் தி.மு.க. அரசு என்றைக்கும் பின்வாங்கியது கிடையாது.

குறுவை தொகுப்பு திட்டம்

வேளாண் பெருமக்கள் நலன்கருதி இந்தாண்டும் ரூ.61 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவார்கள். வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீட்டில் முழு மானிய விலையில் வழங்கப்படும். வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 2 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சத்தில் வழங்கப்படும்.

வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட 237 வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.6 கோடியே 6 லட்சத்தில் வழங்கப்படும்.இதன் மூலம் கடந்தாண்டு சாதனை இந்தாண்டும் தொடர போகிறது. அதைவிட கூடுதல் பயன் அடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முன்கூட்டியே திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை முறையாக பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு உழவர்நலத்திட்டங்களை பயன்படுத்தியும் நெல்உற்பத்தியில் புதியதொரு சாதனையை இந்தாண்டும் டெல்டா விவசாயிகள் படைக்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

முதலீடு தேடி வருகிறது

கேள்வி:- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சி தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். உங்களுடைய பார்வையில் கடந்த ஓராண்டு எப்படி இருக்கிறது?

பதில்:- நானும் ஒரு ஆள் இருக்கிறேன் என்று மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதையாவது ஒன்றை சொல்லி கொண்டு இருக்கிறார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கலவரம், சாதிமத சண்டைகள், துப்பாக்கிசூடுகள், கூட்டு வன்முறைகள், இதெல்லாம் எந்த சம்பவமும் நடைபெறாத ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தான் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் முதலீடுகளும் தேடி வரக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. எனவே தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதற்கு இதுவே சாட்சி.

கேள்வி:- அரசு ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் இன்று ஓய்வுபெற்றுள்ளார்கள். இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் ஆயிரக்கணக்கான பேர் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுக்கான பணப்பலன்கள் கிடைக்குமா?. வயது வரம்பு 58-லிருந்து 60-வதாக ஆக்கி உள்ளார்கள். அதை குறைக்கும் எண்ணம் உள்ளதா?.

பதில்:- இது குறித்தெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். முடிந்தவுடன் உங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறோம்.

கேள்வி:- அரசிடம் இருக்கக்கூடிய சில ரகசிய விஷயங்கள் எல்லாம் அண்ணாமலைக்கு எப்படி தெரிகிறது என்ற கேள்வி இருக்கிறதே. சில விஷயங்களை அரசு தெரிவிப்பதற்கு முன்பாகவே நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று முன்கூட்டியே அண்ணாமலை கூறுகிறாரே?.

பதில்:- அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அவ்வளவு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் நிருபர்கள் வேளாண் விரிவாக்க திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு இவ்வளவு திட்டம் என்று அறிவித்துள்ளீர்கள். அதில்,பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும் 100 சதவீத மானியம் என்று கூறி இருக்கிறீர்கள். அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே? என்று கேள்வி கேட்டனர். இதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலதித்த போது, முதல்கட்டமாக பரீட்சார்த்தமாக ஆதிதிராவிட மக்களுக்கு 100 சதவீதம் கொடுத்துள்ளோம். பிற்காலத்தில் அது விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

அதன்பின் தமிழக அரசு சார்பில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்