4 பேரை ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 4 பேரை ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2023-01-11 18:45 GMT

கோவை

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 4 பேரை ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவ்பீக், உமர் பாரூக், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி, பெரோஸ்கான் ஆகிய 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பலமுறை ரகசிய கூட்டங்கள் நடத்தியதும் தெரியவந்தது.

அத்துடன் ஜமேஷா முபின் தொடர்பான கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சனாபர் அலி, முகமது ரியாஸ், முகமது தவ்பீக், முகமது நவாஸ் ஆகியோர் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பொருட்களை காருக்கு எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது.

ரகசிய கூட்டம்

இதையடுத்து சனாபர் அலி, முகமது ரியாஸ், முகமது தவ்பீக், முகமது நவாஸ், ஷேக் இதயத்துல்லா, முகமது தல்கா ஆகிய 6 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை பூந்தமல்லி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜமேஷா முபின் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆசனூர், கடம்பூர் பகுதியில் ரகசிய கூட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜமேஷா முபின் வீட்டில் விசாரணை

அத்துடன் இந்த ரகசிய கூட்டத்தில் பலர் கலந்து கொண்டதும் தெரியவந்தது. எனவே இது தொடர்பான தகவலை சேகரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் சனாபர் அலி, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவ்பீக் ஆகிய 4 பேரையும் என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்களிடம் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், வெடிபொருட்களை எடுத்துச்சென்றது, அந்த பொருட்கள் எங்கு வாங்கியது?, இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது?, என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

வீடியோ பதிவு

தொடர்ந்து அவர்களை உக்கடத்தில் உள்ள சனாபர் அலி வீடு, ஜி.எம்.பேக்கரி ஆகிய பகுதிகளுக்கும் அதிகாரிகள் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதை வீடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த விசாரணை அதிகாலை 2 மணி வரை நீடித்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு அழைத்துச்சென்றனர்.

சத்தியமங்கலம் பகுதியில் மட்டுமே ரகசிய கூட்டம் நடத்தப்பட்டது தெரியவந்த நிலையில் தற்போது, ஆசனூர், கடம்பூர் மலைப்பகுதியில் ஜமேஷா முபின் ரகசிய கூட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு கைதான 6 பேரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினால் கூடுதல் தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆய்வு செய்ய முடிவு

எனவே அவர்களை அந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கூட்டம் நடத்திய இடத்தையும், அவர்கள் தங்கி இருந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அத்துடன் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவலை சேகரிக்க, ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த பட்டியலையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்