இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ்பாடம் அறிமுகம்

இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ்பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2022-11-04 20:51 GMT

விழுப்புரம்,

புதிய கல்விக்கொள்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறைபாடுகளை களைந்துள்ளதாக அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழக அரசு சுட்டிக்காட்டிய குறைபாடுகள் முழுமையாக களையப்படவில்லை. இதனால்தான் புதிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கல்விக்கொள்கை என்பது இந்தியை திணிப்பதற்காக கொண்டு வந்துள்ளனர். இந்த கல்விக்கொள்கை தமிழுக்கும், தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ்பாடம்

மாநில மொழிக்காக புதிய கல்விக்கொள்கையில் எதையும் சொல்லவில்லை. கடந்த 2010-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியை அறிமுகம் செய்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அனைத்து அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் தமிழ் பாடம் 2 செமஸ்டர்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நீட் தேர்வை நீக்குவதற்கு நீதிமன்றம் மூலம் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் பேச்சுக்கு கண்டனம்

நம் அரசியல் அமைப்பே மதசார்பற்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக கவர்னர் பேசியுள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள், மாநில அரசை எதிர்த்ததால் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் மாநில அரசை எதிர்த்ததால் அங்கிருந்த கவர்னருக்கு துணை குடியரசுத்தலைவர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனக்கும் பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக தமிழக கவர்னர், இதுபோன்று பேசி வருகிறார். ஒரு கவர்னராக இருந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்