தனியார் வங்கி ஊழியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

தனியார் வங்கி ஊழியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

Update: 2022-10-22 20:23 GMT

கடன் செயலி மூலம் வந்த பணத்தை செலுத்த கூறி தனியார் வங்கி ஊழியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியது குறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் கடன்

தஞ்சையை சேர்ந்தவர் 29 வயதான வாலிபர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

நான் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறேன். எனது முகநூலில், ஆன்லைன் கடன் தருவதாக விளம்பரம் வந்தது. மேலும் அந்த கடனை பெற குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த செயலியை பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பெயர் விவரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்தேன். பின்னர் அதில் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் கடன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை பார்த்ததும் அந்த கட்டணத்தை செலுத்தாமல் செயலியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

ஆபாசமாக சித்தரித்து...

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து என்னுடைய வங்கி கணக்கிற்கு ரூ.9ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. எனது வங்கி கணக்கிற்கு வந்த பணம் கடன் செயலி மூலம் வந்த பணம் என்பதை அறிந்த உடன் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். சில நாட்கள் கழித்து எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து எனது செல்போன் எண்ணிற்கு அனுப்பி, வெளியிடாமல் இருக்க ரூ.14 ஆயிரத்து 700-யை கொடுக்க வேண்டும் என்று குறுந்தகவல் வந்தது.

மேலும் ஆபாசமாக சித்தரித்த படங்களை உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தனர். எனவே மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதே போல் கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மணப்பெண் அலங்காரம் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வாட்ஸ்அப் மூலம் அழகு சாதன பொருட்களை வாங்க முயற்சித்தார். அதற்காக அவர் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய அந்த நபர் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி ரூ.5 ஆயிரத்து 50-யை அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு அழகுசாதன பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து அந்த நபரிடம் பலமுறை கேட்டும் பலனில்லை. இதுகுறித்து அவர் தஞ்சை சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்