கார் வாங்கிய விவகாரம்; வாலிபரை கடத்தி மிரட்டல்

கார் வாங்கிய விவகாரத்தில் வாலிபரை கடத்தி மிரட்டியதாக நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 17:12 GMT

காவேரிப்பட்டணம்:

பணம் கேட்டு தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புளியாண்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 51). விவசாயி. இவரது காரை அடகு வைத்து நிதி நிறுவனத்தில் பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை திரும்ப செலுத்தவில்லை. மேலும் அந்த காரை சாமந்தப்பட்டியை அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள செந்தில் (30) என்பவருக்கு கார் புரோக்கர் காளிதாஸ் மூலம் விற்றுள்ளார். பின்னர் அவர்கள் அந்த காரை பண்ணந்தூரை சேர்ந்த விஜயேந்திரன் (28) என்பவருக்கு விற்றுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தினருக்கு செலுத்த வேண்டிய தொகையை கட்டாததால் கடன் கொடுத்த பைனான்ஸ் நிறுவனத்தினர் கோவிந்தசாமியிடம் பணத்தை கேட்டனர். அப்போது காரை பண்ணந்தூரை சேர்ந்த விஜயேந்திரன் திருடிச் சென்று விட்டார் என்று கூறியதாக தெரிகிறது. இதை ஏற்காத நிதி நிறுவனத்தினர் காருக்கான தொகையை கட்டுமாறு கோவிந்தசாமியிடம் கூறி வந்தனர்.

4 பேர் மீது வழக்கு

இதையடுத்து கோவிந்தசாமி, கார் புரோக்கர் காளிதாஸ், நிதி நிறுவன ஊழியர் மணி மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் சேகர் ஆகியோர் விஜயேந்திரனிடம் இருந்து காரை வாங்குவதற்காக சென்றனர். அப்போது விஜயேந்திரனிடம் கார் இல்லாததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்துவிஜயேந்திரனை கடத்தி சென்று காரை திரும்ப தருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நிதி நிறுவனத்தை சேர்ந்த சேகர், ஊழியர் மணி, கார் புரோக்கர் காளிதாஸ், கோவிந்தசாமி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்