முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

பாலக்கோடு அருகே தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடப்பதாக வெளியான தகவல் தொடர்பாக நேரில் ஆய்வு நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார்.

Update: 2022-06-16 17:15 GMT

பாலக்கோடு அருகே தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடப்பதாக வெளியான தகவல் தொடர்பாக நேரில் ஆய்வு நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார்.

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அங்கு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது:-

பாலக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு நேரில் ஆய்வு நடத்தினேன். அப்போது அங்கு அந்த அமைப்பின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கல்வித்துறையின் எந்தவித அனுமதியும் பெறாமல் அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

விசாரணை அறிக்கை

கல்வித்துறையின் அனுமதியைபெறாமல்இனிமேல் அங்கு எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. தற்போது நடத்தப்பட்ட நிகழ்ச்சியை தொடரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். அந்த பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறினார்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கல்வி நிலையங்களில் சாதி, மத அடிப்படையிலான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அரசின் வழிகாட்டுதலை மீறி இத்தகைய பயிற்சி முகாம்களை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்