மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்; மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் மின்கட்டண தொகையை கட்ட முடியாமல் தவித்தனர்.;

Update:2022-09-30 15:46 IST

இதனையடுத்து பின்னர் அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இணையதள சேவை பழுது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட இணையதள சேவை பழுது காரணமாக கவுண்ட்டர்களில் மின் கட்டணம் கட்டுவதற்கு அலுவலகம் வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மின்கட்டணம் கட்டுவதற்கு நேற்று கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் கவுண்ட்டர்களில் பணம் கட்டுவதாக இருந்தால் நாளை வந்து அபராத தொகையுடன் செலுத்துமாறும், அபராதம் இல்லாமல் செலுத்தவேண்டுமென்றால் செல்போன் செயலி மூலம் செலுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் வாக்குவாதம்

அப்போது செல்போன் செயலி குறித்து தெரியாத பாமர மக்கள் எப்படி மின் கட்டணத்தை செலுத்துவார்கள்? என கேள்வி எழுப்பிய பொதுமக்கள் உதவி செயற்பொறியாளர் சிவகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை முடங்கிய காரணத்துக்காக காலதாமதமாக செலுத்தும் மின் கட்டணம் செலுத்துவதாக கூறி நாங்கள் ஏன் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆத்திரமடைந்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இணையதள சேவை முடக்கம் என்கிற சூழலில் ஏற்படும் காலதாமதத்திற்கு மின்சார வாரியமே பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும், அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்