மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் திருவிழா: சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் திருவிழாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-08-13 18:44 GMT

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் 4 நாட்கள் சர்வதேச பட்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் மாமல்லபுரம் நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்களில் வந்தவர்கள், வெண்ணெய் உருண்டைக்கல், ஐந்துரதம் சாலை, கடற்கரை சாலை, பாடசாலை தெரு, கலங்கரை விளக்க சாலை போன்ற பகுதிகளில் சாலை ஓரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுவதால் இந்த சாலைகளில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

வாகன நிறுத்துமிடம் இல்லை

கடற்கரை சாலை பகுதியில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான காலி நிலங்கள் ஏக்கர் கணக்கில் இருந்தும் அங்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் விஷேச நாட்களில் வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்து வரும் அவலம் நீடிக்கிறது.

இதனால் நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா வாகனங்கள் புராதன சின்னங்களுக்கு சென்றுவிட்டு மாமல்லபுரம் நகரை விட்டு வெளியேற ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. அந்த வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்கள் ஆமை வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. மேலும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களை நெரிசலில் சிக்காமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்