இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு செல்லும் நிலைக்கு செயல்படுவது நியாயமில்லை.
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலீசார், அவர்களுடன் சாலையில் நின்ற பொதுமக்களையும் கைது செய்து அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.
01.06.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8 ஆயிரத்து 370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் என உள்ளது. ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு, காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே தங்கள் உடலை வருத்திக் கொண்டு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இப்போது சென்னையில் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்நிலையில் நேற்று முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட தொடங்கிய போது போராடிய சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்கும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பு தி.மு.க வாக்குறுதி கொடுக்கும் போது நிதிநிலை சீராகும் போது கொடுப்போம் என்று தெரிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கை வரிசை எண் 311- இல் 20 ஆயிரம் இடைநிலை. ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது, வாக்கு வாங்கி வெற்றிபெறத்தான் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன.
எனவே தமிழக தி.மு.க அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி, ஆசிரியர்களின் பொருளாதார நிலைமை, மாணவர்களுக்கு போராட்டமில்லா ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உடனடியாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.