அறுவடை செய்த கேரட்டை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த கேரட்டை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-06-09 14:28 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த கேரட்டை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரட் அறுவடை

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட் சாகுபடி செய்தனர். கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்ததால் கேரட் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து தற்போது கோத்தகிரி பகுதியில் கேரட் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம்

இதையடுத்து அறுவடை செய்த கேரட்டுகளை சுத்தம் செய்து, அதனை விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி காய்கறி கழுவும் மையங்களுக்கு கேரட்டை சுத்தம் செய்து, அதன் பின்னர் மூட்டைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது கேரட் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோத்தகிரி பகுதியில் நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா உள்ளிட்ட பல்வேறு ரக கேரட்டுகள் பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் கேரட் சாகுபடி செய்வதற்கும், உரம், மருந்து, அறுவடை செய்ய தொழிலாளர்கள் கூலி என ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் இருப்பின் ஒரு ஏக்கரில் 100 மூட்டைகள் வரை கேரட் கிடைக்கும். தற்போது கேரட்டுக்கு போதுமான விலை உள்ளதால் விவசாயிகள் நிம்மதியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்