அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2022-06-11 15:01 GMT

ஊட்டி, ஜூன்.12-

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தலைமை செயலர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்தாண்டு திறக்கப்பட்டு மாணவ- மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினர். இதன்பின்னர் கடந்த மாத இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

இதையொட்டி கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் பள்ளிகள் அனைத்தையும் தூய்மையுடன் தயார் நிலையில் வைக்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். இதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

700 பள்ளிகள்

நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 700 பள்ளிகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள், மைதானம், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பள்ளி வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசால படுத்தப்பட்டு உள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருந்த சிறு சிறு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வகுப்பறையில் இருந்த ஒட்டடை அடிக்கப்பட்டு மேஜைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு வருவதால் பளிச்சென்று காட்சியளிக்கின்றன.

இந்தப் பணியில் தலைமை ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இதேபோல் பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்