ரூ.40 லட்சத்தில் சிறு பாலத்துடன் கூடிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
ரூ.40 லட்சத்தில் சிறு பாலத்துடன் கூடிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தீவிரம் நடந்து வருகிறது.
கரூர்,
கால்வாய்கள் அமைக்கும் பணி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய பஸ் நிலையம் அம்மா உணவகத்தில் இருந்து வரும் கழிவுநீர் பிரம்மதீர்த்தம் சாலையில் பூண்டு மார்க்கெட் அருகே சாலையின் குறுக்காக கால்வாயை கடந்து செல்வதால் அப்பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது.மேலும் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழை நீர் அடைப்பின் காரணமாக செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி
இதையடுத்து கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் சிறு பாலத்துடன் கூடிய சாக்கடை கால்வாய் அமைக்க கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் பறிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.இந்த பணிகளால் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து கனரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.