பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

சீர்காழி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படு்த்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-12 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படு்த்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலை எண்ணெய்

உணவு பொருள் தயாரிப்பதில் கடலை எண்ணெய்க்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. தோசை, உப்புமா, காரவகை தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கு கடலை எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய் உபயோகப்படுத்துவதால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

இதனால் தான் முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் நிலக்கடலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கடலை எண்ணெய்யை தினந்தோறும் உணவு பண்டங்களில் உபயோகப்படுத்தி வந்தனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நிலக்கடலை தினந்தோறும் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிப்பது, உடல் உறுதி, மலச்சிக்கல் பிரச்சினைகள் தீருதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நிலக்கடலை மற்றும் கடலை எண்ணெய் உபயோகம் கடந்த 15 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. ஏனென்றால் சன்பிளவர், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய்கள் சந்தையில் கவர்ச்சிகரமான பாலிதீன் கவர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்களின் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டதன் காரணமாக கடலை எண்ணெய் உபயோகம் குறைந்து விட்டது.

பூச்சி தாக்குதல் அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனாவின் போது எதிர்ப்பு சக்தி மக்களிடம் குறைந்து விட்டதால் நோய் தாக்குதல் அதிகரித்து இறப்புகள் ஏற்பட்டன. அப்போது மக்கள் பழைய பாரம்பரிய உணவு பொருட்களை தேடி சாப்பிட ஆரம்பித்தனர். அதன் காரணமாகவே பாரம்பரிய நெல் ரகங்கள், கடலை, மற்றும் சிறுதானிய பொருட்களை விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். இந்த நிலக்கடலை மார்கழி பட்டத்தில் சீர்காழி, மாதானம், திருமுல்லைவாசல், மங்கை மடம், ராதா நல்லூர், மேலையூர், மாணிக்க பங்கு, திருக்கடையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது களை எடுக்கும் பணிகள் முடிந்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனியின் காரணமாக பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.

மருந்து தெளிக்கும் பணிகள்

தொடர்ந்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலக்கடலை சாகுபடி மார்கழி மற்றும் சித்திரைப்பட்டத்தில் மேற்கண்ட பகுதியில் செய்து வருகிறோம். இந்த ஆண்டு விதை கடலை விலை உயர்வு, உழவு செலவு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் நிலக்கடலைக்கு கூடுதல் விலை கிடைப்பதில்லை. மேலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. எனவே நிலக்கடலையை பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைத்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்