மாநகர காவல் துறையுடன் இணைக்கும் பணிகள் தீவிரம்

திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திலுள்ள பகுதிகளை மாநகர காவல் துறையுடன் இணைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2022-06-15 19:00 GMT

திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திலுள்ள பகுதிகளை மாநகர காவல் துறையுடன் இணைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

காவல் துறையுடன் இணைக்க...

திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அதற்கேற்ப குற்ற செயல்கள், போக்குவரத்து நெருக்கடி போன்றவையும் அதிகரித்து வருகின்றன.

எனவே கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை எளிதில் மேற்கொள்வதற்காக திருச்சி மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல், சோமரசம்பேட்டை, ராம்ஜிநகர், கொள்ளிடம் (நெம்பர் 1 டோல்கேட்) ஆகிய போலீஸ் நிலையங்களை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இது தொடர்பாக அவ்வப்போது மாநகர காவல்துறை சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் இதுவரை எவ்வித விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

டி.ஜி.பி. அலுவலகம்

இந்த சூழலில் திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பெல் ஆகிய போலீஸ் நிலையங்கள் அடங்கிய திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திலுள்ள பகுதிகளை திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த புதிய கருத்துரு டி.ஜி.பி. அலுவலகத்தால் அண்மையில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த 4 போலீஸ் நிலையங்களின் எல்லைகளை நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி புதிதாக வரைபடம் தயாரித்து அனுப்பி வைக்குமாறு திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் தயாரிக்க மாநகர காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்