குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி 7,500 ஏக்கரில் நிறைவடைந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2022-06-18 21:34 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி 7,500 ஏக்கரில் நிறைவடைந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருபோக நெல் சாகுபடி

குமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை, ரப்பர், மரச்சீனி, மலர்கள், கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெற்பயிரைப் பொறுத்தவரையில் மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த மாவட்டத்தின் விவசாயத்துக்கு நீராதாரங்களாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு, பொய்கை ஆகிய அணைகள் இருந்து வருகின்றன. நெல் முதல்போக சாகுபடியான கன்னிப்பூ சாகுபடியை தொடங்குவதற்கு ஏதுவாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் உள்ள அணைகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, 2-வது போக நெல் சாகுபடியான கும்பப்பூ சாகுபடி நிறைவு பெறும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் அணைகள் மூடப்படும்.

7,500 ஏக்கரில்...

இந்தநிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டிலும் தேவையான அளவு மழை பெய்ததாலும், அணைகளில் தேவையான அளவு தண்ணீர் இருந்ததாலும் கடந்த மாதத்தில் இருந்தே விவசாயிகள் கன்னிப்பூ நெல் சாகுபடியை தொடங்கி விட்டனர். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கன்னிப்பூ நெல் சாகுபடியை பொறுத்தவரையில் குமரி மாவட்டத்தில் 6 ஆயிரம் எக்டரில் (அதாவது 13,500 ஏக்கரில்) நடைபெறுவது வழக்கம்.

பூதப்பாண்டி, ஈசாந்திமங்கலம், பறக்கை, தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 3 ஆயிரம் எக்டர் அதாவது 7,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யும் பணி நிறைவடைந்துள்ளது என்றும், அகஸ்தீஸ்வரம் கடைமடைப் பகுதி, வீரமார்த்தாண்டன்புதூர், செண்பகராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி வருகிற ஜூலை மாதத்துக்குள் 6 ஆயிரம் எக்டரிலும் நிறைவடைந்து விடும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னிப்பூ நெல் அறுவடைப்பணி வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவு பெறும். அதற்கேற்றாற்போல் விவசாயிகள் தீவிரமாக கன்னிப்பூ நெல்சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்