குறுவை சாகுபடிக்கு எந்திரம் மூலம் விதைக்கும் பணிகள் தீவிரம்

குறுவை சாகுபடிக்கு எந்திரம் மூலம் விதைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதையொட்டி விவசாயிகளுக்கு சன்னரக நெல்லை வேளாண் அதிகாரிகள் பரிந்துரை செய்கின்றனர்.

Update: 2023-06-14 18:45 GMT

குறுவை சாகுபடிக்கு எந்திரம் மூலம் விதைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதையொட்டி விவசாயிகளுக்கு சன்னரக நெல்லை வேளாண் அதிகாரிகள் பரிந்துரை செய்கின்றனர்.

நெல்விதைக்கும் பணிகள்

திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையான பயிராக நெல் விதைக்கப்படுகிறது.

தற்போது குறுவை சாகுபடி நிலத்தில் டிராக்டர் மூலம் குறுவை நெல்விதைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிலையில் திருவாரூரில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்தது. இதே போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கை விதைப்பு முறை

சாகுபடிக்கு தேவையான விதை நெல் ரகங்கள் வேளாண் விற்பனை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை ரகங்கள் அனைத்தும் 105 முதல் 115 நாட்கள் வயதுடையதாகும். இந்த விதை நெல்களில் சன்னரக நெல் டி.பி.எஸ். 5 விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாாிகள் பரிந்துரை செய்து வருகின்றனர். குறுவை விதைப்பு கை விதைப்பு முறை மற்றும் எந்திரம் (டிராக்டர்) மூலம் விதைப்பு நடந்து வருகிறது. கை விதைப்பு முறையில் நெல் விதை தெளிக்கும் போது அதிகளவில் விதைகள் ஒரே இடத்தில் விழும்.

இதனால் அந்த இடத்தில் நெற்பயிர் அடர்த்தியாக வளர்ந்து பூச்சி நோய் தாக்குதலுக்கு வழிவகை செய்யும். எந்திரம் மூலம் விதைப்பதால் சரியான அளவு இடைவெளியில் விதைக்கப்படுகிறது. இதனால் பூச்சி தாக்குதல் இருக்காது. மேலும் விதை நெல் தேவை குறைவதோடு, களை எடுக்க எளிதாகவும், உர தேவையும் குறைகிறது. எந்திர விதைப்பு முறை செலவுகளை குறைக்கும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் எந்திர விதைக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர்.

எந்திர நாற்று நடவு

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண்துறையில், சீடு ட்ரில் என்னும் டிராக்டர் எந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த எந்திரமானது ஒரு மணிநேரத்தில் 1.5 ஏக்கர் நிலத்தில் குறைந்த நேரத்தில் விதைக்கிறது. கை விதைப்பில் 30 கிலோ வரை தேவைப்படும் விதை நெல் எந்திரம் மூலம் விதைக்கும் போது 20 கிலோ வரை தேவைப்படுகிறது. எந்திர நாற்று நடவு போல் விதைப்பு பத்தி மாறாமல், விதைக்கிறது. இந்த விதைப்பு புழுதி உழவிற்கு பிறகு விதைக்க வேண்டும் என்றார்.

வேளாண் துணை இயக்குனர் லட்சுமிகாந்தன் கூறுகையில், நடப்பாண்டு ஒரு லட்சம் ஏக்கருக்கு கூடுதலாக குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு சுமார் 160 டன் வரையில் குறுவை விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஜூன் மாதத்திற்குள் 50 சதவீதம் விதைப்பு நடந்துவிடும். மறுமாதம் 100 சதவீதம் குறுவை விதைப்பு நிறைவடைந்துவிடும். குறுவை சாகுபடியில் ரேஷன் வினியோக தேவைக்காக சன்னரக நெல் அதிகளவில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கபடுகிறது. இவ்வாறு அவா் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்