பாம்பனில் புதிய தூக்குப்பாலத்துக்கானஉபகரணங்களை ஒன்றிணைக்கும் பணி

பாம்பனின் புதிய தூக்குப்பாலத்துக்கான உபகரணங்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது. பின்னர் அந்த உபகரணங்களை பொருத்த நகரும் கிரேன்கள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-05-30 18:45 GMT

ராமேசுவரம், 

பாம்பனின் புதிய தூக்குப்பாலத்துக்கான உபகரணங்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது. பின்னர் அந்த உபகரணங்களை பொருத்த நகரும் கிரேன்கள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புதிய தூக்குப்பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில், வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது நடந்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் விறுவிறுப்பாகவே நடைபெற்று, இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. புதிய பாலத்தின் மையப் பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

சத்திரக்குடியில் உள்ள ரெயில்வே தொழிற்சாலையில் புதிய தூக்குப்பாலத்தின் உபகரணங்கள் இரும்பினால் செய்யப்பட்டு, தனித்தனி பாகங்களாக பாம்பன் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வெல்டிங் செய்து ஒன்றிணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணியானது 2019-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே கொரோனா பரவலால், 6 மாதத்திற்கு மேலாக வேலை நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ரெயில் பாலத்தின் பணிகள் தொடங்கின.

ஆரம்பத்தில் ரூ. 250 கோடி நிதியில் இந்த பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் தற்போது ரூ.450 கோடியில் இந்த திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் 333 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மண்டபத்திலிருந்து பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில், தூக்குப்பாலம் அமைய உள்ள இடம் வரையிலும் இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

புதிய தூக்கு பாலத்தின் உபகரணங்களை கொண்டு வந்து அதை வெல்டிங் செய்து ஒன்றிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவ்வாறு இணைக்கும் பணி முடிவடைய இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். இந்த பணிகள் முடிந்த பின்னரே இந்த தூக்குபாலமானது நகரும் கிரேன் மூலம் தூண்கள் வழியாகவே மையப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்படும்.

மிக முக்கியமானது

அதன் பின்னர் இன்னும் பல முக்கிய பணிகளும் நடைபெற உள்ளது. தூக்குப்பாலத்தின் உபகரணங்கள் மையப் பகுதிக்கு கொண்டு சென்ற பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப்பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீதும் இரும்பு கர்டர் மற்றும் தண்டவாளங்கள் பொருத்தும் பணி நடைபெறும்.

புதிய ரெயில் பாலத்தின் பணிகளிலேயே மிக முக்கியமான பணி என்றால் அது தூக்குப்பாலத்துக்கான பணிகள் தான். புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் 6 மாத காலம் ஆக வாய்ப்புகள் உள்ளது.

தூண்கள் மீது அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இரும்பு கர்டரின் நீளம் சுமார் 20 மீட்டர் ஆகும். எடை 28 டன் ஆகும். அதுபோல் மையப் பகுதியில் அமைய உள்ள தூக்கு பாலத்தின் நீளம் 74 மீட்டர். இதன் எடை சுமார் 600 டன் இருக்கும். அதுபோல் கப்பல்கள் கடக்க வரும்போது ரோடு பாலத்தின் உயரத்திற்கு, அதாவது 15 மீட்டர் உயரம் புதிய தூக்குபாலம் திறக்கும்.

தெற்காசியாவிலேயே அமைய உள்ள முதல் வெரிடிகல் லிப்டிங் தூக்குப்பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூக்குப்பாலத்தில், 50 கிலோமீட்டர் வேகத்திற்கு ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்