ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 139 கிராம ஊராட்சிகளில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பண்ணை குட்டைகள் அமைத்தல்
தமிழ்நாடு அரசின் 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான "மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், கிராம அளவில் தன்னிறைவு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற்றிடும் வகையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், மின் இணைப்பு மற்றும் சூரியசக்தி பம்பு செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் உலர் களங்கள், சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்டவை ஆகும்.
ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டில் 54 கிராம ஊராட்சிகளிலும், 2022-23-ம் ஆண்டில் 85 கிராம ஊராட்சிகளிலும் என கடந்த 2 நிதியாண்டுகளில் 139 கிராம ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் வேளாண்மை துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் 46 ஆயிரத்து 65 பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டில் (2023-24) 65 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தன்னிறைவு அடைந்திடும் வகையில் அனைத்து துறை திட்டங்களும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.