பிரதமரின் கிசான் திட்டத்தில் தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
பிரதமரின் கிசான் திட்டத்தில் தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவணை தொகை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் தவணை தொகை பெற்று வருகின்றனர். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை (இ-கே.ஒய்.சி.) பி.எம்.கிசான் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி, உடனடியாக பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன்பெறலாம்.
பதிவேற்றம் செய்து...
மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம். கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி. முறையில் ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 73 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.